படகர் மக்கள் தொகை
இந்திய நாட்டில் பத்து ஆண்டுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. அவ்வகையில் கடந்த 2011ஆம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கை அண்மையில் இந்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி படகர் மக்கள் தொகை 1,33,550 ஆகும். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் 2001ஆம் ஆண்டில் படகர் மக்கள்தொகை 1,34,514 என்று இருந்துள்ளது. அதாவது 2001ஆம் ஆண்டில் இருந்த படகர் மக்கள் தொகையைக் காட்டிலும் 2011ஆம் ஆண்டில் படகர் மக்கள் தொகை 964 குறைந்துள்ளது. இந்தக் கணக்கு சரியானதுதானா? உண்மையில் படகர் மக்கள் தொகை குறைந்துள்ளதா? இல்லை என்றால் இப்படிக் குறைவாகக் காட்டுவதற்குக் காரணம் என்ன?
2001ஆம் ஆண்டில் 6,07,93,814 ஆக இருந்த தமிழர் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டில் 6,90,26,881 ஆக உயர்ந்துள்ளது. அதைப்போல் 2001ஆம் ஆண்டில் 3,79,24,001 ஆக இருந்த கன்னடர் மக்கள்தொகை 2011ஆம் ஆண்டில் 4,37,06,512 ஆக உயர்ந்துள்ளது. இந்திய அளவில் 2001ஆம் ஆண்டில் 1,028,737,436 ஆக இருந்த மக்கள் தொகை 2011ஆம் ஆண்டில் 1,210,726,932 ஆக உயர்ந்துள்ளது.
இப்படிப் பிறமொழியினர் மக்கள் தொகை எல்லாம் கூடி இருக்கின்ற சமயத்தில் படகர் மக்கள் தொகை குறைந்திருக்கிறது என்பது நம்பத் தகுந்ததாக இல்லை என்பதனை மேலோட்டமாக இதனைப் பார்ப்போரும் உணர்ந்துவிடலாம்.
2011ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கு எடுக்க வந்தோர்க்குப் படகர்களில் ஒரு பகுதியினர் அளித்த தவறான தகவலே படகர் மக்கள்தொகை குறைந்ததாகக் காட்டுவதற்குக் காரணம்.
கணக்கெடுக்க வந்தோர் தாய்மொழியைப் பற்றிக் கேட்டுள்ளனர். அதற்கு மக்கள் அளித்த தகவலையே அவர்கள் பதிவு செய்துள்ளனர். கணக்கு எடுக்க வந்தோர்க்குத் தாங்களாக ஒருவரது தய்மொழியைப்பற்றி எதையும் குறிக்க கூடாது என்றும் தகவல் தருவோர் தருவதை மட்டும் குறிக்க வேண்டும் என்னும் அறிவுரை கொடுக்கப்பட்டிருந்தது என்பது கவனிக்கத் தக்கது.
படகு மொழிக்கு இதுவரை எழுத்து உருவாக வில்லை. ஆகையால் இதற்குத் தாய்மொழி என்னும் தகுதிப்பாடு இல்லை என்று படகர்களில் சிலர் தாங்களாகவே நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அதனால் உங்கள் தாய்மொழி என்ன? என்று கேட்கும்போது சிலர் தமிழ் என்று குறிப்பிட்டுள்ளனர். வேறு சிலர் கன்னடம் என்று குறிப்பிட்டுள்ளனர். இதுவே படகர் மக்கள்தொகையைக் குறைவாகக் காட்டுவதற்குக் காரணம் ஆகும்.
எழுத்துள்ள மொழிதான் தாய்மொழி என்னும் தகுதிப்பாடு கொண்டுள்ளதா? எழுத்தமையாத மொழிக்குத் தாய்மொழித் தகுதி இல்லாயா? என்றால் அவ்வாறான வரையறை எங்கும் இல்லை. படகுவைப் போன்று எழுத்தில்லா மொழிகள் இந்திய அளவில் பட்டியல் மொழிகள் 22-ல் இடம் பெற்றுள்ளன என்பதைக் கவனிக்க வேண்டும். போடோ, டோக்கிரி போன்ற தமக்கென்று தனியாக எழுத்தமையாத மொழிகளும் பட்டியல் மொழிகள் 22–ல் இடம்பெற்றுள்ளன. அண்மைக் காலத்தில் படகுமொழி தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழி எழுத்துகளைக் கொண்டு எழுதப்பட்டு வருகின்றன. ஆகையால் படகுமொழியை எழுத்தமையாத மொழி என்று குறிப்பிடுவதனையும் இனி தவிர்த்து விடுதல் நல்லது.
ஒருவரது குழந்தைப் பருவத்தில் அவரது தாய் பேசுவதே அவரின் தாய்மொழி என்று 2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக் கையேடு தெளிவாகக் குறிப்பிடுகிறது. ஒருவர்க்கு அவரது தாய்மொழியைப் பற்றிக் குறிப்பிடும் சூழல் மிக அருகியே ஏற்படுகின்றது. ஆகையால் தாய்மொழியைப் பற்றிப் பலர் தெளிவில்லாமல் இருக்கின்றனர். ஐயம் சிறிதும் வேண்டாம். படகரது தாய்மொழி படகுதான். இதனை படுகு, படகு, படக என்று எப்படி வேண்டுமானும் குறிப்பிடலாம்.
மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் படகுமொழியைக் கன்னடத்துக் கிளைமொழி போலக்கொண்டு கன்னடத்துடன் சேர்ந்தே கணக்கிட்டுள்ளனர். படகு கன்னடத்துக் கிளைமொழி அன்று. அது தமிழ், கன்னடம், மலையாளம் போன்று தனியான ஒரு மொழி என்பது மொழியியல் அடிப்படையில் ஆணித்தரமாக நிறுவப்பட்டுள்ளது.
ஒரு மொழி அதைப் பேசும் மக்களின் இன்றியமையாத இயல்பண்பினைக் காட்டுவதாக இருக்கிறது. இந்தியாவைப்போன்ற பல மொழிகளும், பல இனங்களும் பல மதத்தினரும் இருக்கின்ற நாட்டில் மொழி தனக்கே உரிய தனித்தன்மையைப் பெறுகிறது. அதுவும் மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் இயல்பாகவே மொழிகள் சிறப்பிடம் பெறுகின்றன. மொழிதொடர்பான தகவல்களைத் தருவதில் இந்திய மக்கள்தொகைக் கணக்கு முதன்மை இடத்தில் இருக்கிறது. பட்டியல் இனத்தவரைத் தவிர்த்து பிறரிடம் இனம் தொடர்பான செய்திகள் எதுவும் கணக்கெடுப்பில் கேட்பதில்லை. ஆகையால் மொழிக் கணக்கே ஒருவகையாக இனக்கணக்கையும் கொள்வதற்கு எடுத்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது. ஆகையால் இனிவரும் காலங்களில் தாய்மொழித் தொடர்பாகச் செய்தி தெரிவிக்க வேண்டிய இடங்களில் சரியான தகவலை அளிக்கவேண்டும். இச்செய்தியை மக்கள் அனைவரும் அறிந்திருக்க வேண்டியது கட்டாயம்.
இந்தியாவில் 121 மொழிகளும் 270 தாய்மொழிகளும் இருப்பதாக 2011 ஆம் ஆண்டில் எடுத்த கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. 121 மொழிகளில் 22 பட்டியலில் இடம்பெற்ற மொழிகள். மீதமுள்ள 99 மொழிகள் பட்டியலில் இடம்பெறாத மொழிகள். 270 தாய்மொழிப் பட்டியலில் படகு மொழி இடம்பெற்றுள்ளது.