Badaga Calendar – 2019


IMG_20181223_133336

Dr.Haldorai releasingthe calendar to Raghu Joghee

Dr.Haldorai has prepared a Badaga Calendar for 2019 and the same has been released by the Nelikolu Charitable Trust.

This is the second edition of Badaga Calendar conceived and prepared by Dr.Haldorai after the first edition one in 2018.

படகர் காலக்கணக்கு 

Dr.R.Haldorai

        படகுமொழியில் ஜெந (நாள்), பார (வாரம்), திங்குவ (திங்கள்), பருச (வருடம்) போன்றன காலக்கணக்கைக் காட்டும் சொற்கள்.

ஒரக்கது (காலை), ஹகலு (நண்பகல்), பூ ஹொத்து (எற்பாடு, சாயுங்காலம்), சந்தொத்து (மாலை), இரு (யாமம்), கோயிஜாம அல்லது பாகு (விடியல், வைகறை). என்பன சிறு பொழுதுகளாகும். சிறு பொழுதின் கால அளவு பத்து நாழிகை (நான்கு மணி நேரம்)  

        படகர் நாள்கணக்கில் ஞாயிறு உதயத்திலிருந்து மறு நாள் ஞாயிறு உதயம் வரை ஒரு நாளாகும். ஒரு நாள் முதலில் ஹகலு (பகல்), இரு (இரவு) என்று இரண்டாகப் பிரியும். ஒரக்கது, ஹகலு, பூ ஹொத்து என்பன பகலின் பிரிவுகள். சந்த்து அல்லது சந்தொத்து, இரு, கோயிஜாம அல்லது பாகு என்பன இரவின் பிரிவுகள்.

        ஒரு வாரத்திற்கு ஏழு நாள்கள். சோவார (திங்கள்), மங்கவார (செவ்வாய்), பொதவார (புதன்), சிக்குவார (வியாழன்), பெள்ளி (வெள்ளி). சநி (சனி), ஆதிவார (ஞாயிறு) என்பன படகுவில் நாள்களைக் குறிக்கும் சொற்கள். இவை முறையே சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, சூரியன் என்னும் கோள்கள் வரிசையில் அமைந்தன. இவற்றுள் சிக்குவார என்பது சுக்கிரனைக் குறிக்கும் எனக்கொள்ள இடமுண்டு. அவ்வாறானால் சிக்குவார என்பது சுக்கிரன் கோள் அடிப்படையில் வெள்ளிக்குரியது எனக்கொள்ள வேண்டும். என்றாலும் படகுமொழி வெள்ளிக்குப் பெள்ளி (வெள்ளி) என்று கோளைக் கொண்டுவிட்டு சிக்குவார என்பதை வியாழனுக்குக் கொண்டுள்ளது.

        1.) கூடலு, 2.) ஆலாநி, 3.) நல்லாநி, 4.) ஆநி, 5.) ஆதிரெ, 6.) பேராடி, 7.) ஆவாநி, 8.) பெரட்டாதி, 9.) தொட்ட தீவிகெ, 10.) கிரு தீவிகெ, 11.) தய், 12.) எம்மாட்டி  என்பன படகு மாதங்கள்.

        வளர்பிறை நாள் படகுவில் ’ஊ ஜெந’ என்று அழைக்கப்படுகிறது. தேய்பிறை ’அவ் ஜெந’ என்றழைக்கப்படுகிறது. தேய்பிறையைத் ‘தேவெரெ’ என்றும் குறிப்பிடுகின்றனர். ஒரு வளர்பிறை நாள்கள் ஒரு தேய்பிறை நாள்கள் இரண்டும் சேர்ந்தது ஒரு திங்கள் (மாதம்).

        படகர் திங்கள் (மாதம்) சந்திரமானக் கணக்கை அடிப்படையாகக் கொண்டது. திங்களை அளவுகோலாக வைத்துக் காலத்தைக் கணக்கிடும் முறை சந்திரமானம் என்று அழைக்கப்படுகிறது.

                படகர்க்கு வாரம் திங்கட்கிழமையில் தொடங்குகிறது; திங்கள் கிழமை விடுமுறை நாள்; பூசைக்குரிய நாள்; பெரும்பாலான பண்டிகைகள் திங்கள் கிழமையில் கொண்டாடப்படுகின்றன. திங்கட்கிழமை  என்பது ஏழு நாட்கள் கொண்ட ஒரு வாரத்தில்  ஞாயிற்றுக்கிழமைக்கும் செவ்வாய்க்கிழமைக்கும் இடையில் வரும் ஒரு நாள்.  படகுவில் திங்குவ என்னும் சொல் சந்திரனையும்  மாதத்தினையும் குறிக்கிறது.  திங்குவ என்னும் சொல் தமிழில் திங்கள் என்றும் கன்னடத்தில் திங்களு என்றும் மலையாளத்தில் திங்ஙளு என்றும் அழைக்கப்படுகின்றது. இம்மொழிகள் அனைத்திலும் இச்சொல் சந்திரன், மாதம் ஆகிய இரண்டையும் குறிக்கின்றன.

        படகர் சந்திரன் – சூரியன் காலக்கணக்கைக் கொண்டுள்ளனர். அதாவது திங்களைச் சந்திரன் அடிப்படையில் கணக்கிட்டுவிட்டு ஆண்டைச் சூரியன் அடிப்படையில் கணக்கிடுவது சந்திரன் – சூரியன் கணக்காகும்.

                படகுத் திங்கள் அமாவாசைக்கு அடுத்த நாளில் தொடங்குகிறது. ஆகையால் படகு புத்தாண்டும்  ஓர்  அமாவாசைக்கு அடுத்த நாள்தான் தொடங்கும். அமாவாசையை படகு மொழியில் முட்டு என்று குறிப்பிடுகின்றனர். தென்னாட்டைச் சேர்ந்த பஞ்ச திராவிடர்களுக்குத் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மராட்டி, குஜராத்து) திங்கள் அமாவாசைக்கு அடுத்த நாளில் பிறக்கும். அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து அடுத்த அமாவாசை நாள் வரை ஒரு திங்கள். சக ஆண்டு அல்லது சாலிவாகன ஆண்டு எனக் குறிப்பிடும் ஆண்டுமுறையிலும் அமாவாசைக்கு அடுத்த நாள்தான் திங்கள் பிறக்கும். சாலிவாகன ஆண்டுமுறை சந்திரன்–சூரியன் அடிப்படையில் உருவானது. இது கி.பி.78ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதாகக் கணக்கிடுகின்றனர். இந்த அடிப்படையில் தான் படகுவில் 2019 ஆம் ஆண்டினை அய்யந 0பருச 1941 என்று குறிப்பிட்டுள்ளோம்.

        சந்திரமானக்கணக்கில் ஒரு திங்கள் 29/30 நாள்களைக் கொண்டதாக இருக்கும் படகர் மாதம் அமாவாசைக்கு அடுத்த நாளாக இருப்பதால் மாதத்தின் முதல் 15 நாள்கள் வளர்பிறையாகவும் அதற்கடுத்த 15 நள்கள் தேய்பிறையாகவும் இருக்கும்

        சூரியனை அளவுகோலாகக் கொண்டு அளவிடுவது சூரியமானக் கணக்கு. பூமி சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாள்கள் ஆகின்றன. இந்தக் கணக்கு முறையில் பருவங்கள் அனைத்தும் சரியாக வருகின்றன.

        சந்திரமானக் கணக்கில் ஒரு திங்கள் 29½ நாள்களைக் கொண்டது. அப்படி யானால் ஆண்டுக்கு 354 (29½ x 12) நாள்கள்தான் வருகின்றன. ஆனால் சூரியமானக் கணக்கில் ஓர் ஆண்டிற்கு 365 1/4 நாள்கள் வரவேண்டும். ஆகச் சந்திரமானக் கணக்கைத் திங்களுக்குக் கொண்டு ஆண்டுக்குச் சூரியமானக் கணக்கைக் கொள்ளும்போது அவ்வப்போது சில நாள்களைச் சேர்த்து கணக்கிட வேண்டிய நிலை உருவாகிறது.

        அமாவாசைக்கு அடுத்த நாள் ஒரு மாதத்தின் தொடக்கம் என்று கொள்ளும்போது ஓர் ஆண்டுக்குரிய பன்னிரண்டு திங்களுக்குப் பன்னிரண்டு அமாவாசைகள் இருக்க வேண்டும். ஆனால் இரண்டு ஆண்டுகள் கழிந்த பின் ஓர் அமாவாசை கூடுதலாக வந்து விடுகிறது. அதாவது அந்த ஆண்டில் பதிமூன்று  அமாவாசைகள் வந்துவிடுகின்றன. இதைச் சரிகட்ட அந்த ஆண்டில் ஓர் அமாவாசையைக் கணக்கில் எடுக்காமல் விட்டு விடுகின்றனர். இவ்வாறு ஓர் அமாவாசையைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஆண்டைச் சரி பருச என்று குறிப்பிடுகின்றனர்.

        பௌர்ணமி நாளின்போது திங்கள் அருகில் இருக்கும் விளங்கிய மீனின் பெயரை அம்மாதத்தின் பெயராகக் கொள்வது சந்திரமானக் கணக்கின் முறையாகும். தொட்டதீவிகெ, கிருதீவிகெ என வரும் படகு மாதப்பெயர்கள் இதைத் காட்டும் வகையில் உள்ளன. எஞ்சியுள்ள படகு மாதப்பெயர்களும் இவற்றைப்போல் விண்மீனின் பெயர்களாகத்தான் இருக்க வேண்டும்.

        அமாவாசைக்கு அடுத்த நாளில் படகர் ஆண்டு தொடங்குவதால் ஆண்டுத் தொடக்கம் ஆண்டு தோறும் மாறி மாறி வரும்.

        சூரியமானக் கணக்குப் பருவங்களைக் குறிக்கச் சரியாக வருகின்றது. ஆகையால் சந்திரமானக் கணக்கைக் கொண்டுள்ளோர் திங்களைச் சந்திரமானம் அடிப்படையில் கணக்கிட்டுவிட்டு ஆண்டைச் சூரியமானக் கணக்குக்குக் கொண்டு செல்கின்றனர். இவ்வகையில்தான் படகு ஆண்டுமுறை அமைந்துள்ளது.

        நெலிகோலு அறக்கட்டளை சென்ற ஆண்டு படகர் நாள்காட்டி வெளியிட்டது. அதேபோல் இவ்வாண்டும் நாள்காட்டி வெளியிட்டுள்ளது. இது, படகர் வரலாற்றில் முதல்முதலாக, சந்திரன் – சூரியன் காலக்கணக்கைக் கொண்டு அச்சிட்ட நாட்காட்டி என்னும் சிறப்பைப் பெறுகிறது.   

                                                                -முனைவர் இரா.கு.ஆல்துரை

Advertisement

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.